வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டமை தொடர்பாக, முன்கூட்டியே உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாட்டின் முன்னணி அமைப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் அழைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா சுட்டிக்காட்டுகையில், 27 உயிர்களைப் பலிகொண்ட நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
அவ்வாறு மாற்றப்பட்ட கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, ஜூலை 07ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான தாக்குதல்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் அதனைச் செவிமடுக்காததே இந்த மரணத்திற்குக் காரணம் என்று சுதேஷ் நந்திமால் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்குத் தனிப்பட்ட ரீதியிலும், அமைச்சு மட்டத்திலான சில செயலாளர்களுக்கும் முன்கூட்டியே அறிவித்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு கைதிகள் தாக்கப்படும் பட்சத்தில் ஏதேனும் ஒரு கைதி கொலை செய்யப்பட்டால் அது அரசாங்கத்திற்குப் பாரியதொரு கரும்புள்ளியாக மாறும் என எச்சரித்தும் அதிகாரிகள் அதற்குச் செவிமடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், முகநூல் ஊடாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள சுதேஷ் நந்திமால் சில்வா, இந்தத் கொலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் அறிவோடுதான் நடந்ததா என அவரிடம் கடுமையான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.
இப்படியாக மனிதர்களைக் கொலை செய்ய முடியுமா என்றும், இதுதான் நாட்டின் சட்டமா என்றும் கேள்வி எழுப்பிய அவர், அமைச்சரின் அறிந்தோ அல்லது அறியாமலோதான் இந்தக்கொலை நடந்திருக்க வேண்டும் எனவும், தற்போதைய சூழ்நிலையில் இது அமைச்சரின் அறிவோடுதான் நடந்ததோ என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் ஜூலை 07ஆம் திகதி கொலை செய்யப்பட்ட ‘அவிஷ்க’ என்ற கைதி தொடர்பாக, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் அழைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தமது முகநூல் பக்கத்தில் முழுமையான காணொளியொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

