பதவியுயர்வுடன் இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் (20.07.2026) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, வட மாகாணத்தில் தனது பணிக்காலத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்களின் சேவையைப் பாராட்டிய அரசாங்க அதிபர், அவரின் புதிய பொறுப்புகள் சிறப்புற அமைய மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள், கொழும்பு கடற்படை தலைமையகத்தின் மூன்றாம் நிலையிலுள்ள பிரதி பிரதானியாகப் பொறுப்பேற்கவுள்ளதுடன், கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக மேலதிக கடமைகளையும் பொறுப்பேற்கவுள்ளார்.
வட மாகாணத்தில் பணியாற்றிய காலப்பகுதியில், புனித கச்சதீவு அந்தோனியார் திருவிழா, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம் உள்ளிட்ட முக்கிய மத நிகழ்வுகளுக்கான கடல் வழிப் போக்குவரத்து ஏற்பாடுகளை திறம்பட ஒருங்கிணைத்ததுடன், நெடுந்தீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான பயணிகள் கடற்போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

