உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, நீதி அமைச்சர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அறியப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட அச்சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (29) பிற்பகல் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே, இந்த தகவல் வௌியாகியுள்ளது.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ரஜீவ் அமரசூரிய, குறித்த கலந்துரையாடல் ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் வரை நீடித்ததாகக் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டாம் எனத் தமது சங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைத்து வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், குறித்த கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி, அது தொடர்பான முடிவை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ள தொலைநோக்கற்ற யோசனைக்கு சட்டத் துறையைச் சேர்ந்த அனைவரும் கரங்களை உயர்த்தி எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எடுத்துள்ளது ஒரு அறிவற்ற தீர்மானம், இது நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட பலத்த அடி என்றும் குறிப்பிட்டார்.
பொதுச்சபையின் ஏகோபித்த சம்மதம் கிடைத்துள்ளதால் இதற்கு எதிராக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னரை விட மிகச் சிறந்த முறையில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள இந்த யோசனை ஒரு குற்றச் செயல், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், நீதித்துறை கட்டமைப்பிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் அதன் விளைவுகள் நீண்டகால அடிப்படையிலேயே அமையும் என்றும் எச்சரித்தார்.
அரசாங்கம் அமல்படுத்தியுள்ள இந்த விசித்திரமான யோசனையினால் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அசௌகரியத்திற்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும், உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் ஏனைய நீதிபதிகளையும் அசௌகரியத்திற்கு உட்படுத்தாமல், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு இதனை நிறுத்த முடியும் என்றும், அப்படி இல்லையெனில் ஜனநாயக மக்கள் தீர்ப்பிற்கு செல்ல வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

