நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து சென்ற அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய இருவர் ஹெரோயின் மற்றும் ஜஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் புதன்கிழமை (29) இரவு மட்டக்களப்பு கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி 7.5 கிலோகிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் வியாபாரி ஒருவர், பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த போதைப்பொருள் வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த கைதியை பார்வையிடுவதற்காக அவரது சகோதரரும் நண்பரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்று கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த ஹோட்டலில் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது, அறையில் தங்கியிருந்த தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான குறித்த சிறைக்கைதியின் சகோதரர் ஏற்கனவே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்த நிலையில், அண்மையில் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

