நாட்டின் நீதிமன்ற அமைப்பில் நீண்டகாலமாக நிலவிவரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு துரித சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகத் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹிருணி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ரசாயனப் பகுப்பாய்வுத் துறை: வழக்கு விசாரணைகளின் தாமதத்தைக் குறைக்க, அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 50 புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதே திணைக்களத்தில் காலியாக உள்ள 131 பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரத்தினபுரி, கம்பஹா, வரக்காபொல மற்றும் அனுராதபுரம் ஆகிய மேலதிக நீதவான் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தளம், வெல்லவாய மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், சில நீதவான் நீதிமன்றங்களுக்கு மாவட்ட நீதிமன்ற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வீடிலிருந்தபடியே வழக்குத் தாக்கல் செய்யவும், விசாரணைத் தவணைகளை அறிந்து கொள்ளவும் இணையவழிச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. கராபிட்டிய மற்றும் கண்டி நீதிமன்றங்களில் காணொளி ஊடான கட்டமைப்பு மற்றும் உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் நவீன டிஜிட்டல் அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது அனுமதிக்கப்பட்ட 110 நீதிபதி இடங்ளில் 94 பேர் மட்டுமே உள்ள நிலையில், மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 120 ஆக உயர்த்தி, தேங்கியுள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹாவிற்கு மட்டும் வரையறுக்கப்பட்டிருந்த “மூவரடங்கிய மேல் நீதிமன்ற விசேட ஆயங்களின்” சேவைகள் இனி நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன. இதன்படி நீதிபதிகள் நேரடியாக மாவட்டங்களுக்குச் சென்று வழக்குகளை விசாரிப்பதன் மூலம், தலைநகரை நோக்கி மக்கள் அலைய வேண்டிய சிரமம் தவிர்க்கப்படும் எனக் சுட்டிக்காட்டப்பட்டது.

