திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பவெவ காட்டுப்பகுதியில் சொகுசு காரொன்றை கைவிட்டுவிட்டு போதைப்பொருட்களுடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் இன்று (09.08.2026) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பகுதியில் இருந்து சொகுசு காரொன்றில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதித் தடைகளை அமைத்து பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, அவ்வழியாக வந்த குறித்த சொகுசு காரை பொலிஸார் நிறுத்துமாறு சமிக்ஞை செய்தபோதும், சாரதி பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக செலுத்திச் சென்றுள்ளார்.
தப்பிச் செல்லும் போது, வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரையும் குறித்த கார் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் அத்தாபெந்திவெவ வீதியூடாகச் சென்ற குறித்த வாகனம், தம்பவெவ குறுக்கு வீதியினூடாக அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் செலுத்தப்பட்டுள்ளது.
அங்கு காரை நிறுத்திய சந்தேகநபர்கள், அதிலிருந்ததாகக் கூறப்படும் போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ள மொரவெவ பொலிஸார், தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும், சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறப்படும் நபர் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://samugammedia.com/luxury-car-escapes-police-chase–shock-as-it-enters-the-forest-1786272230

