42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக் கொண்டு மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இன்றைய தினத்தின் முதலாவது நிகழ்ச்சியாக “தேசிய மீலாத் பாடசாலைக் கண்காட்சி” நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியின் ஆரம்ப விழாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசிங்க, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, நீர்கொழும்பு மாநகர முதல்வர் துலிப் சாமர, பிரதி மாநகர முதல்வர் முகம்மட் பசீர் ஆகியோருடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வை உறுதிப்படுத்தும் இன்றைய தினத்தின் இரண்டாவது நிகழ்ச்சியான “Welcome to Our Mosque” (எங்கள் பள்ளிவாசலுக்கு உங்களை வரவேற்கிறோம்) நிகழ்ச்சி நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதான ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அழைக்கப்பட்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கே.எஸ்.என். அபேசிங்க, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, 42 வது தேசிய மீலாதுன் நபி பிரதான அரச பெருவிழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர் உரிமையாக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன உள்ளிட்ட அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

