எல் நினோ நிலைமையின் நேரடி தாக்கம் இலங்கையில் குறைவாக இருந்தாலும், உலகின் ஏனைய நாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக இலங்கையின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்திலும் மறைமுக தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய எல் நினோ (El Niño) சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆராய்ந்து, முன்ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில், நேற்று வர்த்தக அமைச்சில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அத்தியாவசிய இறக்குமதி உணவுப் பொருட்களின் பாதுகாப்பான இருப்பை முன்கூட்டியே பேணுவது அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, இறக்குமதியாளர்களிடம் தற்போது காணப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு தொடர்பான தகவல்கள் கோரப்பட்டதுடன், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகளும் பரிசீலிக்கப்பட்டன.
பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், கருவாடு மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இருப்பைப் பேணுதல் மற்றும் அவற்றின் விலைகளை ஸ்திரமாக வைத்திருப்பது தொடர்பிலும் இறக்குமதியாளர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து, இந்த விடயத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி பொறுப்புடன் செயற்படுமாறு அமைச்சர் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

