மணல் காடு சவுக்கங்காட்டில் நேற்று முதல் பரவி வரும் பாரிய காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், தீ இதுவரை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், இன்று பிற்பகல் 1.00 மணி முதல் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் வானிலிருந்து தண்ணீர் பாய்ச்சி தீயை அணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர், மருதங்கேணி பொலிஸார், வனவளத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், தீ தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதுடன், பல ஏக்கர் பரப்பளவிலான சவுக்கங்காடுகள் தீக்கிரையாகி நாசமடைந்துள்ளன.
தீ மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் கடும் பிரயத்தனத்துடன் தீயணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



