இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்தை (EEZ) அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் ஈரானிய எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பில் இலங்கைக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லை எனவும், அந்தக் கப்பல்களுக்கு இலங்கை சார்பில் எந்தவொரு வசதிகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்துக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக ‘TankerTrackers’ இணையதளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள கடற்படைத் தடைகள் காரணமாக குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் ‘Shadow Fleet’ எனப்படும் நிழற்படை கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக ‘TankerTrackers’ குறிப்பிட்டுள்ளது.
எனினும், குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என அந்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கை கரையிலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் ‘Iris Dena’ என்ற கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி அதனை மூழ்கடித்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில், தற்போது இலங்கையை அண்மித்துள்ள கப்பல்களுக்கும் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் ‘TankerTrackers’ தெரிவித்துள்ளது.
இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாடொன்றின் பிராந்திய கடல் எல்லைக்குள், அதாவது கரையிலிருந்து 12 கடல் மைல் வரையிலான கடற்பரப்பில் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
Source: https://samugammedia.com/iranian-ships-anchored-near-sri-lanka—government-monitoring-1787998908

