முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு மாகாண சபைக்கு முதன்முறையாக ‘முனைப்பழியற்ற அபிப்பிராயம்’ ஆளுநர் பெருமிதம்

மாகாண சபை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய கணக்காய்வுத் தலைமை அதிபதியால் வடக்கு மாகாண சபைக்கு 2025ஆம் ஆண்டுக்கான ‘முனைப்பழியற்ற அபிப்பிராயம்’ (Unqualified Opinion) வழங்கப்பட்டிருப்பது, வடக்கு மாகாண நிர்வாக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான மைல்கல் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபைக்கும், அதன் கீழ் இயங்கும் ஒன்பது திணைக்களங்களுக்கும் 2025ஆம் ஆண்டுக்கான முனைப்பழியற்ற அபிப்பிராயம் கிடைக்கப்பெற்றமை மற்றும் இலங்கை அரச நிதிக் கணக்காளர்கள் சங்கத்தால் நடத்தப்பட்ட சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கீடுகளுக்கான போட்டியில் வடக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் தங்கம் மற்றும் வெண்கல விருதுகளைப் பெற்றமை ஆகியவற்றைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (03.09.2026) வியாழக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு ஆளுநர் உரையாற்றினார்.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஒரு அரச நிறுவனம் மக்களின் பணத்தை எவ்வளவு பொறுப்புடன் நிர்வகிக்கின்றது என்பதற்கான உண்மையான கண்ணாடி அதன் கணக்குகளும் கணக்காய்வுமே எனக் குறிப்பிட்ட ஆளுநர், மாகாண நிர்வாகம் பல திட்டங்களை மேற்கொண்டோம் எனக் கூறுவதைக் காட்டிலும், அவற்றுக்குப் பின்னாலுள்ள நிதி முகாமைத்துவம் முறையாகவும் நம்பகத்தன்மையுடனும் அமைந்துள்ளதா என்பதே முக்கியமானது என்றார்.

2025 டிசெம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான கணக்காய்வில் வடக்கு மாகாண சபைக்கு முதன்முறையாக முனைப்பழியற்ற அபிப்பிராயம் கிடைத்திருப்பது பல மாதங்களும் ஆண்டுகளும் அமைதியாகவும் பொறுப்புடனும் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என அவர் குறிப்பிட்டார். 

இது தனிநபர் ஒருவருடைய வெற்றி அல்ல, முழு மாகாண நிர்வாகத்தின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என வலியுறுத்திய ஆளுநர், வடக்கு மாகாணத்தில் இயங்கும் 32 நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்கள் 2025ஆம் ஆண்டுக்கான முனைப்பழியற்ற அபிப்பிராயத்தைப் பெற்றிருப்பதும் பாராட்டுக்குரிய பெறுபேறு எனத் தெரிவித்தார். அந்த நிறுவனங்களின் முன்னேற்றம் ஏனைய நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘கணக்குப் பிள்ளை பேசக் கூடாது, கணக்குப் புத்தகம் பேச வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்த ஆளுநர், நிர்வாகம் எவ்வளவு சிறப்பாகச் செயற்படுகின்றது என்று நாம் கூறிக் கொள்வதைவிட, எமது கணக்குகளும் கணக்காய்வு முடிவுகளுமே அதற்கான உண்மையான சாட்சியாக இருக்க வேண்டும் என்றார். 

அதேவேளை, கடந்த கால கணக்காய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டு இதுவரை தீர்க்கப்படாத கணக்காய்வுப் பந்திகள் மற்றும் நிதி ஒழுங்கின்மைகள் தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், கடந்த காலத் தவறுகளை அகற்றி, எதிர்காலத்தில் மேலும் குறைபாடற்ற நிர்வாகத்தை உருவாக்குவதற்கு இன்றைய அங்கீகாரம் ஒரு வலுவான அடித்தளமாக அமைய வேண்டும் என்றார்.

அண்மைக்காலங்களில் மாகாண நிர்வாகத்தின் முன்னேற்றத்தையும் சீர்திருத்தங்களையும் சில வெளிப்புறத் தரப்புகள் பாதிக்க முயற்சிக்கக்கூடிய சூழ்நிலைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அவற்றுக்குப் பதிலளிப்பது யார் தவறு செய்தார் எனக் குற்றஞ்சாட்டுவதன் மூலம் அல்ல, எமது பணி, எமது கணக்குகள், எமது பெறுபேறுகள் மற்றும் மக்களுக்கு வழங்கும் சேவைகள் ஊடாகவே இருக்க வேண்டும் என்றார்.

மேலும், தனிப்பட்ட முன்னுரிமைகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிகாரப் போட்டிகளைத் தாண்டி, வடக்கு மாகாணம் எவ்வாறு மேலும் முன்னேற வேண்டும் என்பதையே அனைவரும் ஒரே கேள்வியாகக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

‘வடக்கு மாகாண நிர்வாகம் முழுமையான நம்பிக்கைக்குரியது’ என எமது மக்கள் மனதாரக் கூறும் நாளே எமக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய விருது எனக் குறிப்பிட்ட ஆளுநர், இன்னும் உயர்ந்த தரத்தை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதம உள்ளக கணக்காய்வாளர், திணைக்களத் தலைவர்கள், கணக்காய்வு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/governor-proud-as-northern-provincial-council-expresses-unbiased-opinion-for-the-first-time-1788432254

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.