ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் இதுவரை நால்வர் மாத்திரமே சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பிரசார செலவு அறிக்கைகள்
இதேவேளை, இந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் தோற்றியுள்ளனர்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக முன்னணியின் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, ஸ்ரீலங்கா சமாஜ்வாதி கட்சியின் மஹிந்த தேவகே, சுயேச்சை வேட்பாளர் பிரேமசிறிமானகே மற்றும் கே. ஆனந்த குலரத்ன ஆகிய நால்வரே தமது பிரசார செலவு அறிக்கைகளை வழங்கியுள்ளனர்.
மேலும், தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின்படி, எதிர்வரும் 13ஆம் திகதிக்குள் பிரசார செலவு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அதன்பின் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளுக்கு சட்டவிரோதக் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்படலாம் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.