பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டம், தெரேசியா பிரிவில் நேற்று மதியம் சுமார் 12.35 மணியளவில் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தெரேசியா தோட்டத்தில் வசிக்கும் 56 வயதான வேலு புஷ்பராணி என்ற பெண் தோட்டத் தொழிலாளியே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
அவர் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென அவர் மீது பாய்ந்துள்ளது.
இதனால் அவர் நிலத்தில் விழுந்த நிலையில், சிறுத்தை அவரது கழுத்து மற்றும் கைகளில் கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஏனைய பெண் தொழிலாளர்கள் சத்தமிட்டுள்ளனர்.
இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து விலகிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பெண் தொழிலாளியை சக தொழிலாளர்கள் உடனடியாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்

