தமிழ் மக்களின் பல்வேறு போராட்டங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சமகால அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் சில குழப்பங்கள் காணப்படுவதாக தெரிவித்த அவர், குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மீண்டும் மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவது குறித்து கருத்து வெளியிட்டார்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், போதனா வைத்தியசாலையைத் தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகள் மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ளதாகவும், அவற்றின் நிர்வாக அதிகாரங்கள் மாகாண சபைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மன்னார் வைத்தியசாலையில் மாத்திரமல்லாது, நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் குறைபாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை, மருந்துத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்தால் அதன் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு வைத்தியசாலை முன்னேற்றமடையும் என கருதுவது தவறான அணுகுமுறை என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
மன்னார் ஆயர், மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவது சரியான நிலைப்பாடு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பாதிரியார்கள் நீண்டகாலமாக போராடியுள்ளதாகவும், சிலர் தமது உயிர்களையே தியாகம் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, இராஜப்பு ஜோசப் ஆண்டகை, யுத்தத்திற்குப் பின்னரும் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் இனப்படுகொலை தொடர்பான பல்வேறு கருத்துக்களை துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்ததாக அவர் தெரிவித்தார்.
அவ்வாறான சமூகப் பின்னணியைக் கொண்ட மன்னார் மறைமாவட்டத்தின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஆயர், தமிழ் மக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் கிடைத்த அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்திடம் வழங்க வேண்டும் எனக் கூறுவது பொருத்தமானதல்ல என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
“தயவுசெய்து ஆயர் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழ் மக்களுக்கு கிடைத்த அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் தொடர்பில் தொடர்ந்து இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால், “தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் தேவையில்லை” என்ற செய்தியை சிங்கள அரசாங்கங்களுக்கு நாமே வழங்குவதாக அமைந்துவிடும் எனவும் அவர் எச்சரித்தார்.
வைத்தியசாலைகள் தேவையில்லை எனக் கூறினால், அடுத்ததாக பாடசாலைகளும் தேவையில்லை என்று கூற வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும், அப்படியானால் தமிழ் மக்களுக்கு எந்த உரிமைகள் தேவை என்பது தொடர்பில் கேள்வி எழும் என்றும் அவர் தெரிவித்தார்.
மன்னார் வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை தாம் மறுக்கவில்லை என குறிப்பிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
குறிப்பாக, தேவையான ஆளணிகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர், பொதுமக்கள் அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அதற்குப் பதிலாக, வைத்தியசாலையையே மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைப்பது என்பது தமிழ் மக்களுக்கு கிடைத்த அதிகாரங்களை மீண்டும் கையளிப்பதற்கு சமமானது எனவும், இது மிகவும் தவறான முன்னுதாரணமாக அமையும் எனவும் அவர் கூறினார்.
இது கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான அல்லது ஆயருக்கு எதிரான கருத்து அல்ல எனத் தெளிவுபடுத்திய அவர், தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட உரிமைகளை மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற எண்ணமே தவறானது என சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த விடயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுதொடர்பாக தவறான விளக்கங்கள் முன்வைக்கப்படக் கூடாது என்றும் அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்வதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

