Courtesy: தீபச்செல்வன்
நவம்பர் மாதம் என்றவுடன் ஈழம், மாவீரர்களின் நினைவில் கனக்கத் துவங்குகிறது.
உலகத்தின் போக்கைப் போலவே ஈழத்திலும் தன்னலம் மிக்க அரசியல் சூழலும் சுயநலம் மிக்க சமூக இயல்புகளும் மேலோங்குகின்ற இன்றைய காலத்தில், கழுத்தில் நஞ்சை அணிந்து தேச விடுதலைக்காக தம் உயிர், உடல், இளமை, வாழ்வு என அத்தனையையும் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களின் மகத்தான தியாகத்தை இன்னுமின்னும் உணரவும் வழிபடவும் உந்தப்படுகிறோம்.
சம காலத்தில் பேசப்படும் திசைகாட்டி அரசியலும் தமிழ் அரசியலின் தன்னலச் சூழலால் ஏற்பட்டுள்ள அழிவுகளும் அவலங்களும் மாவீரர்களின் மகத்துவமான தியாகத்தில் எம்மை கரைக்கவும் வழிப்படுத்தவும் தூண்டுகிறது.
தமிழர் தேசத்தில் தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை ஒவ்வொரு மாவீரர் நாளும் ஒரு அழுத்தமான செய்தியை வரலாற்றில் சொல்லியே செல்கிறது.
மாவீரர் வாரம் ஆரம்பம்
ஈழத் தமிழ் தேசத்தில் இன்றைய தினம், நவம்பர் 21 இலிருந்து மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ளது.
அத்துடன் கடந்த சில நாட்களாக மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகளும் ஈழத் தமிழ் தாயகம் எங்கும் இடம்பெற்று வருகின்றன.
இந்த மண்ணுக்காக தங்கள் பிள்ளைகளை ஈர்ந்த தாய்மார்களதும், தந்தையர்களதும் முகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வீரம் தெரியும் அந்த முகங்களில் ஈரமும் தெரிகிறது.
தியாகம் தெரியும் அந்த முகங்களில் சோகமும் தெரிகிறது. ஈழ விடுதலைக்காய் தம் பிள்ளைகளை ஈர்ந்த அந்த முகங்களில் இருந்து எண்ணற்ற செய்திகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு தந்தையும் தம் பிள்ளைகளைப் பெற்றெடுத்த போது கொண்டிருந்த கனவுகள் எப்படி இருந்திருக்கும்?
ஆனாலும் அந்தப் பிள்ளைகள் எல்லாவற்றையும் துறந்து தேச விடுதலை என்ற புனித இலட்சியம் நோக்கிப் பயணம் செய்தார்கள்.
புலிச் சீருடை அணிந்து, கழுத்தில் நஞ்சு மாலை அணிந்து துப்பாக்கி ஏந்தி, ஈழத் தமிழ் தேசத்தின் விடுதலையே மூச்சென தலைவன் காட்டி பாதையில் தம் பயணத்தை மேற்கொண்டார்கள்.
அத்தகைய பிள்ளைகளின் நினைவுகளில் மூட்டிய தேசமாக ஈழத் தமிழ் தேசம் இருக்கிறது. மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பில் நாம் மட்டுமல்ல, இலங்கை அரசும் சிங்கள மக்களும் மாவீரர் பெற்றோரின் முகங்களை வாசிக்க வேண்டும். அதன் மூலம் பல செய்திகளை அவர்கள் பெற முடியும்.
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் துயிலும் இல்லங்கள்
நவம்பர் 27 மாவீரர் நாள். அந் நாளை முன்னிட்டு தமிழர் தேசத்தின் மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாராகி வருகின்றன. ஈழத் தமிழ் தேச மக்கள் திரண்டு எம் விடுதலைக்காய் களமாடி மாண்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக ஈழத் தமிழ் தேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகளும் தமிழர் தேசத்தில் ஆரம்பமாகியுள்ளன.
தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், உரித்துடையோர் ஆகியோர் தமிழர் தேசம் எங்கும் கௌரவிக்கப்படுவது மரபாகும்.
அந்த வகையில் தாயகத்தில் கிராமம் தோறும் உள்ள அமைப்புக்கள், பிரதேச அமைப்புக்கள் என்பன மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்கின்றன.
எத்தகைய அடக்குமுறைச் சூழலிலும் மாவீரர் நாளின்போது தமிழ் மக்கள் அனைவரும் வேறுபாடற்ற வகையில் துயிலும் இல்லங்களில் ஒன்றுகூடி மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதை வழக்கமான மரபாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள சாட்டி துயிலும் இல்லத்திலும் மாவீரர் நாள் நினைவேந்தல் வார ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு தமிழர் தாயகம் எங்குமுள்ள துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் வார ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
துயிலும் இல்லங்களில் தொடங்குங்கள்
கடந்த காலத்தில் சிறிலங்கா அரசு மாவீரர் துயிலும் இல்லங்கள் மீது மிக மோசமான இனவழிப்பைப் புரிந்து வந்துள்ளன. மகிந்த ராஜபக்ச போரின் முடிவில் மாவீரர் துயிலும் இல்லங்களை புல்டோசரால் உடைத்து சிதைத்து அழித்தார்.
அதுவே சிறிலங்கா அரசு மீதும் சிங்கள மக்கள் மீதும் பாரிய அதிருப்தியினை ஈழத் தமிழ் மக்கள் கொள்வதற்கு காரணமாகின.
அதேபோன்று கடந்த காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்த விடாமல் தடுத்திருந்தார். அத்துடன் ஈழத் தமிழ் மக்கள் மீது பாரிய அச்சுறுத்தல்களை விடுத்து மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு 2020இல் தடைவிதித்தார்.
பின் வந்த காலத்தில் சிறிலங்கா ஆட்சியில் இருந்து அவர் தூக்கி எறியப்பட்டு நாட்டை விட்டு தப்பியோடிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிலையில் கடந்த காலத்தில் ரணில் அரசு மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அறிவிக்கப்படாத தடைகளைப் பிரயோகித்தது. இதனால் மாவீரர் நாளின்போது அரச படைகளும் காவல்துறையினரும் இடையூறுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் கடந்த ஆண்டு ஈடுபட்டனர்.
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்ற சிறிலங்கா காவல்துறையினர் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரனிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதேபோல வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்காக துயிலும் இல்லத்தை துப்புரவு செய்து, ஏற்பாடுகளை செய்த மாவீரர் நாள் பணிக்குழு மாங்குளம் காவல்துறையினரால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.
இவ்வாறான மறைமுக அச்சுறுத்தல்களை கடந்த காலத்தில் ரணிலின் இரட்டைமுக ஆட்சி ஏற்படுத்தியது.
இராணுவத்தை வெளியேற்றுமா அரசு
இந்த நிலையில் தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவி ஏற்றுள்ளதுடன் பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றியுள்ளார்.
கடந்த காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கட்சி ஜேவிபி. அத்துடன் தமது ஜேவிபி வீரர்களை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
எனவே தமிழர் தேசத்தில் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைகள் மற்றும் இனவழிப்புக்கு எதிராகப் போராடி மாண்ட இந்த மண்ணின் பிள்ளைகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர இடமளிப்பதே முதலில் வடக்கு கிழக்கு மக்களை தமது பிரஜைகளாக இந்த அரசு ஏற்றுக்கொள்வதன் வெளிப்பாடாக அமையும்.
கடந்த காலத்தில் எத்தகைய அடக்குமுறைகளின் மத்தியிலும் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வரும் ஈழத் தமிழ் மக்கள், இந்த முறை அரசிடம் எதிர்பார்ப்பது என்ன? எங்கள் தேசத்தின் பிள்ளைகள், எங்கள் தேசத்தின் உறவுகள் விதைக்கப்பட்ட நிலத்தில் பாரிய இராணுவ முகாங்களை அமைத்து வாழும் இராணுவத்தினரை வெளியேற்றி அங்கு மாவீரர் நாளைக் கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும்.
அதாவது துயிலும் இல்லங்களில் குடிகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு? அப்படிச் செய்தால்தான் ‘எமது ஆட்சியில் வடக்கு தெற்கு என்ற பிரிவில்லை’ என்ற அநுர குமார திசாநாயக்காவின் அண்மைய வார்த்தைகள் உண்மையாக அமையும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
21 November, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>