சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (07) நண்பகல் சுமார் 12.08 மணியளவில் காலி, அங்குலுகக, இமதுவ, தெலிச்சவில, யட்டியான மற்றும் தங்கல்ல ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் காரணமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பகல் வேளையில் மனித உடலால் உணரக்கூடிய அளவில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். எனவே, இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
முல்லைத்தீவு தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையும், காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும்.
இதனால் குறித்த கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம். மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

