ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (09) முற்பகல் 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை நாளை (10) வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலை மனித உடலால் உணரக்கூடியதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலாபம் முதல் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
திருகோணமலை முதல் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சிலாபம் முதல் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகரிக்கக்கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வலப்பிட்டி முதல் காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அந்த நேரங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

