மறைமுகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கொலை செய்ய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்ட போலி ஜீப் ஒன்றை, ‘வலன’ மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை நேற்று (08) கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 2025 நவம்பர் 29ஆம் திகதி கிரிந்த கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது 325 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்திற்கு குறித்த உளவாளி தகவல் வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 500 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாரிய இழப்புக்கு பழிவாங்கும் நோக்கில், வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் ‘ரூபன்’ மற்றும் ‘அங்கொட பிரியங்கர’ ஆகிய பாதாள உலகக் குற்றவாளிகளால் குறித்த உளவாளியைக் கடத்தி கொலை செய்யத் திட்டமிடப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கொலை செய்யப்பட்ட உளவாளியின் தலையை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன்பாக வீசிச் செல்லவும் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அந்தத் திட்டம் தோல்வியடைந்த நிலையில், சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் கடந்த செப்டம்பர் 5ஆம் திகதி காலை 6 மணியளவில் கிரிந்த துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த உளவாளியை போலி பொலிஸ் ஜீப் வண்டியால் மோதி கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்போது, ஜீப் வண்டியிலிருந்து தப்பிக்க முயன்ற உளவாளி காயமடைந்துள்ளார். அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்ற ஜீப் வண்டி தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர், கடுவெல – ஹேவாகம பகுதியில் உள்ள பட்டறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த போலி பொலிஸ் ஜீப்பை கண்டுபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஜீப் வண்டி மேலதிக விசாரணைகளுக்காக கிரிந்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

