நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட 724 சுற்றிவளைப்புகளில் 730 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்டவர்களில் 11 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகளும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றிவளைப்புகளின்போது 423 கிராம் ஹெரோயின், 550 கிராம் ஐஸ் போதைப்பொருள், 405 கிராம் கஞ்சா மற்றும் 2,589 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு வளாகம் ஒன்றில் பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸார் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் இரு பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 7 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள், 32 கிராம் ஹஷிஷ், 4 கிராம் ஹெரோயின், 20 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 108,400 ரூபாய் பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி தெஹிவளை – நெதிமல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

