கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருதய சிகிச்சைப் சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் புதிய இருதய சிகிச்சைப் பிரிவு கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்றுப் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.
ஜப்பானிய அரசின் நிதியுதவியுடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஊடாக சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 2 ஆயிரத்து 403 மில்லியன் ரூபாய் நிர்மாணச் செலவு உட்பட ஒட்டுமொத்தமாக உபகரணங்களுடன் சேர்த்து 4 ஆயிரத்து 185 மில்லியன் ரூபா பெறுமதியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதிநவீன அறுவைச் சிகிச்சை கூடங்கள், வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர் சிகிச்சை வசதிகள் மற்றும் முழுமையான ஆய்வுகூடங்களைக் கொண்ட 8 மாடிகளைக் கொண்ட கட்டடமாக இது அமையவுள்ளது.
இந்தத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2028 ஆம் ஆண்டு மே மாதமளவில் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில்,
“கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாத்திரம் மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 7 ஆயிரத்து 100 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கும், உபகரணங்களுடன் சேர்த்து சுமார் 12 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.” – என்று தெரிவித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உரையாற்றுகையில்,
“கடந்த 10 வருடங்களாகப் பேச்சு மட்டத்தில் இருந்த இந்தத் திட்டம், பொருளாதார நெருக்கடியின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதியால் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டமையினாலேயே , ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவியுடன் இந்தத் திட்டத்தை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளது. இது திருகோணமலைக்கு மாத்திரமன்றி முழு கிழக்கு மாகாணத்துக்கும் பெரும் பயனளிக்கும்.” – என்று குறிப்பிட்டார்.
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் உரையாற்றுகையில்,
“சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு நடைபெற்ற கழிவு முகாமைத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின்போது இந்தத் திட்டம் குறித்துக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதிலும், சுகாதாரத்துறையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் ஜப்பான் தொடர்ந்து கைகொடுக்கும்.” – என்றார்.
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, பிரதேச மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கை அலுவலகப் பிரதிநிதி மற்றும் திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

