ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் தவறவிடப்பட்ட சுமார் 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கக் கைச்சங்கிலியை கண்டெடுத்த இரு இளைஞர்கள், அதனை அதன் உரிமையாளரிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) பொகவந்தலாவை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணித்த ரமேஷ் பிருந்தன் மற்றும் மனோராஜ் ஆகிய இருவரும், சென்ஜோன் டிலரி பகுதியில் வீதியில் கிடந்த ஒரு பவுன் நிறையுடைய தங்கக் கைச்சங்கிலியை கண்டெடுத்துள்ளனர்.
சுமார் 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குறித்த நகையை அவர்கள் உடனடியாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவான் மதுசங்கவிடம் ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன், தங்கக் கைச்சங்கிலியின் உரிமையாளரை கண்டறியும் நோக்கில், அதனைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர் உரிய ஆதாரங்களுடன் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு தமது முகப்புத்தகக் கணக்குகள் ஊடாக பதிவொன்றையும் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பதிவைக் கண்ட தங்கக் கைச்சங்கிலியின் உரிமையாளர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, உரிய ஆதாரங்களை முன்வைத்துள்ளார். இதனையடுத்து குறித்த தங்கக் கைச்சங்கிலி அவரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நகையின் உரிமையாளர் பொகவந்தலாவை கிவ் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பு மூலம் சிறுகச் சிறுக சேமித்து வாங்கிய இந்தத் தங்கக் கைச்சங்கிலியை, தனது தேவைக்காக ஹட்டன் நோக்கிச் சென்றபோது தவறவிட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தனது நகையை மீட்டுத் தந்த இளைஞர்களின் மனிதநேயத்தையும் நேர்மையையும் வாழ்நாளில் மறக்க முடியாது எனக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ள அவர், அவர்களின் செயல் தமக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தங்கக் கைச்சங்கிலியை மீட்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர்களின் நேர்மையான செயலை அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

