சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த நிலையில் உயிரிழந்த வைத்தியர் ஹைதுருஸ் மொஹமட் இல்யாஸுக்குப் (Mohammad Ilyas) பதிலாக வேறொரு வேட்பாளரை முன்நிறுத்த சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.
ஹைதுருஸ் மொஹம்மட் இல்யாஸின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் அவர் சார்பில் வேட்புமனுவில் கையொப்பமிட்டவருக்கு வேறொரு வேட்பாளரை பரிந்துரைக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச்சீட்டில் மாற்றம் இல்லை
இதற்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் வாக்குச்சீட்டில் மொஹமட் இல்யாஸின் வாக்காளர் சின்னமும் பெயரும் அச்சிடப்பட்டுள்ளதால் அவற்றில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த புத்தளத்தைச் (Puttalam) சேர்ந்த வைத்தியர் மொஹமட் இல்யாஸ் கடந்த வியாழக்கிழமை (22) உயிரிழந்தார்.
மாரடைப்பால் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் தனது 79 ஆவது வயதில் இயற்கை எய்தியமை குறிப்பிடத்தக்கது.