2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவையும்
இணைத்து, செறிவூட்டப்பட்ட பொருளாதாரத்தை பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்டு
சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின்
அதிகாரிகளுடன் நேற்று(21.01.2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட
கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திறமையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட பொருளாதார அமைப்பை நிறுவுவதன் முக்கியத்துவம் குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியுள்ளது.
அரசாங்க தலையீடு மற்றும் அத்தியாவசிய வசதிகளை வழங்குவதன் மூலம் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில்
ஆராயப்பட்டுள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளின் நன்மைகள்
அத்துடன், உற்பத்தியாளர்கள் வைத்திருக்கும் அரிசி இருப்புகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும்
நெல் கொள்வனவுக்காக அரிசி ஆலைகளுக்கு வழங்கப்படும் கடன்கள் ஒரு
வருடத்திற்குள் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதி செய்தல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகளின் நன்மைகளை அடிமட்ட
மட்டத்திற்கு விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை இதன்போது ஜனாதிபதி
சுட்டிக்காட்டியுள்ளார்.
விநியோக செயன்முறை
அனைத்து மாகாணங்களிலும் சமமான விநியோகத்தை உறுதி செய்யும் பொருளாதாரத்
திட்டத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்த ஜனாதிபதி, தற்போதுள்ள நலன்புரி
விநியோக வழிமுறைகளில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவைகளை கொண்ட சமூகங்களை அடையாளம் கண்டு, சரியான நேரத்தில், அந்த
சமூகங்களுக்கான ஆதரவை உறுதி செய்வதற்காக விநியோக செயன்முறையை விரைவுபடுத்த
வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.