மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு இன்று புதன்கிழமை (9) மன்னார் நகர
முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற போது குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில் சபையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத
நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர நகர முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இன்று (9)
காலை 10 மணியளவில் முதல் அமர்வு ஆரம்பமானது.
இதன் போது ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் சபை அமர்வு ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து
உறுப்பினர்களின் கன்னி உரை இடம் பெற்றது. அதன் போது சென்ற கூட்டறிக்கை
வாசிக்கப்பட்டது.
தவிசாளரினால் கோரிக்கை
அதனைத் தொடர்ந்து நகர சபை அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்ட பாதீட்டை ஏற்றுக்
கொண்டு ஒத்துழைப்பை வழங்க சபையில் தவிசாளரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எனினும் மன்னார் நகர சபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்
எதிர்ப்பை தெரிவித்த நிலையில் பல உறுப்பினர்கள் குறித்த விடயத்திற்கு
எதிர்ப்பை தெரிவித்தனர்.
எனினும் இன்னும் ஒரு தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாதீட்டை தங்களினால்
ஏற்றுக் கொள்ள முடியாது என பல உறுப்பினர்கள் சபையில் தெரிவித்த நிலையில்
சபையில் தொடர்ச்சியாக அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த நிலையில் சபையின் செயல்பாடுகள் தவிசாளரினால் அரை மணித்தியாலம் ஒத்தி
வைக்கப்பட்டது.பின்னர் மீண்டும் சபையின் செயல்பாடுகள் இடம் பெற்ற போதும் நகர
சபை அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்ட பாதீட்டை ஏற்றுக் கொள்ள உறுப்பினர்கள்
மறுத்தனர்.
இதனால் நீண்ட நேரம் சபையில் அமைதியின்மை இடம் பெற்றபோது சபை
உறுப்பினர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
மேலும் குறித்த பாதீடு குறித்து சபையின் செயலாளரின் கருத்துக்களை
உறுப்பினர்கள் எதிர் பார்த்த போதும் செயலாளர் எவ்வித கருத்துக்களையும்
தெரிவிக்கவில்லை.இந்த நிலையில் நகர சபை உறுப்பினர்கள் சிலர் செயலாளருக்கு
எதிராக கருத்தை தெரிவித்தனர்.
கட்சிகளின் அதிருப்தி
இதனால் நீண்ட நேரம் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் குறித்த பாதீட்டை ஏற்றுக் கொள்ளவோ அல்லது அங்கீகரிக்க முடியாது என
பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதனால் உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு ஏற்பட்ட
நிலையில் சபையினை முதல்வர் பிரிதொரு தினத்திற்கு ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் சில உறுப்பினர்கள் தமது அரசியல் கட்சிகளின் அதிருப்தி நிலை
குறித்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
சபை அமர்வை ஒத்தி வைத்தது குறித்து நகர சபையின் முதல்வர் டானியல் வசந்திடம்
வினவிய போது, மன்னார் நகர சபையின் தலைவர் உப தலைவர் தெரிவின் பின்னர் சபையின் முதல் அமர்வு
இன்று புதன்கிழமை (9) காலை இடம்பெற்றது.
சபை அமர்வுக்கான நிகழ்ச்சி நிரல்
அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது.நிகழ்ச்சி
நிரலுக்கு அமைவாக சபை ஒன்று கூடியது.
நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சபை நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்த
போது,முன்னை நாள் சபை உறுப்பினர்கள் சிலரினால் சபையை குழப்பும் வகையில் வருகை
தந்து நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் பட்ட வகையில் அவர்கள் செயல்பட்டு
குழப்பத்தை ஏற்படுத்தினர்.இதன் போது புதிதாக பாதீட்டை தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்
வைத்தனர்.
ஊழல், மோசடிகள்
எனினும் மக்களினால் திட்டமிடப்பட்டு அதிகாரிகளினால் 2025 ஆம்
ஆண்டுக்கான பாதீடு தயாரிக்கப்பட்டது.ஒவ்வொரு கிராமத்திலும் முன்னெடுக்கப்பட
வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்களை மக்கள் ஊடாக தயாரிக்கப்பட்டு பாதீடு
தயாரிக்கப்பட்டது.அதற்கு அமைவாக நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளது.இன்னும் அரைவாசி வேளைத் திட்டங்களே முன்னெடுக்கப்பட
வேண்டி உள்ளது.
அதனை காரணம் காட்டி சபை அமர்வை குழப்பும் வகையில் சபை தவிசாளரின் கட்டளைக்கு
இணங்காமல் சபையை குழப்பும் வகையில் அவர்கள் செயல்பட்டார்கள்.அதன் காரணமாக சபை
ஒத்திவைக்கப்பட்டது.
நகர சபையை பொறுப் பேற்றதன் பிற்பாடு நிறைய ஊழல் மோசடிகள் கண்டு பிடிக்கப்பட்டு
அவற்றை வெளியில் கொண்டு வர முயற்சித்த போது குறித்த ஊழல் விடயங்கள் வெளியில்
வந்து விடக் கூடாது என்பதற்காக இச் சபையை எவ்வாறாவது குழப்ப வேண்டும் என்ற
நோக்கத்துடன் அவர்களின் நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
எனவே இவ்வாறானவர்களுக்கு மக்கள் தான் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என அவர் மேலும் தெரிவித்தார்.