புதிய இணைப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரை கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க பொலிஸார் அனுமதிக்காத நிலையில் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகரவின் கடமைகளை பொறுப்பேற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென்றாலும், அதில் பங்கேற்கும் தகுதி தனக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட முடியும் எனவும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகாமையில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இன்று (05) காலை தலைமையகத்தில் ஒன்றுகூடுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற தீர்ப்பு
முன்னதாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய தாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இன்றைய தினம் (05) தயாசிறி ஜயசேகர பொறுப்புக்களை தயாசிறி ஜயசேகர ஏற்கவுள்ளார்.
கொழும்பு – டார்லி வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தமது பதவியேற்பு நிகழ்விற்கு எவரேனும் இடையூறு விளைவித்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் அதிகாரம்
இதன்படி இன்று (05) டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்திற்குச் சென்று பணிகளை பொறுப்பேற்கவுள்ளதாக நேற்றையை சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு குழுவும் சீர்குலைக்க முயற்சித்தால், தாம் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் எனவும் குறிப்பிட்டார்.
எனவே நாசவேலைகளை செய்யாமல் சுதந்திரமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைக்க அனுமதிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சியின் தலைமையகம் யாருடைய சொத்தும் அல்ல என்றும், அந்த இடத்திற்கும் வரும் மக்களுக்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு பொலிஸ் மா அதிபர், பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜயசேகர தெரிவித்திருந்தார்.