பிரித்தானியாவின் (United Kingdom) பர்மிங்காம் விமான நிலையத்தில் அவசரமாக விமானெமொன்று தரையிறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீச் B200 என்ற தனியார் விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கிட்டத்தட்ட நூறு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையம்
பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அல்லது தரையிறங்கும் விமானங்கள் அனைத்தும் இன்று மதியத்திற்கு மேல் 7.30 மணி வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பெல்ஃபாஸ்டுக்குப் பயணித்துக் கொண்டிருந்த Beech King நிறுவனத்தின் இலகுரக விமானம் ஒன்று அவசர நிலைமை காரணமாக பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் பயணித்த மூவருக்கு சம்பவயிடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மதியத்திற்கு மேல் 1.45 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், இதனையடுத்து மருத்துவ உதவிக் குழு ஒன்று பர்மிங்காம் விமான நிலையத்திற்கு விரைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவருக்கு சிகிச்சை
Beech King விமானம் தரையிறங்கியதும், மூவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் இருந்ததாக மேற்கு மிட்லாண்ட்ஸ் நோயாளர் காவு வண்டி சேவை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விமான நிலையத்தின் சமூக ஊடக பக்கத்தில் இது தொடர்பில் அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையில், “எதிர்பாராத ஒரு விமான சம்பவத்தைத் தொடர்ந்து ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது இதனால் ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள பயணிகளுக்கு நாங்கள் தகவல் தெரிவிப்போம், இன்று பிற்பகல் பயணம் செய்ய வேண்டியவர்கள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு தங்கள் விமானத்தின் நிலையை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புதிய தகவல்கள் உடனுக்குடன் பயணிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும் பதிவு செய்துள்ளனர் இந்த சம்பவத்தை அடுத்து கிட்டத்தட்ட 100 விமானங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானது, சில விமானங்கள் ஐந்து மணி நேரம் வரையில் தாமதமாகலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
