பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற தவறியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் ‘M-2’ பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கெஹலிய ரம்புக்வெல்ல முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் இந்த பிரிவில் இருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் கைது செய்யப்பட்ட அவரது மனைவி மற்றும் மகள் வெலிக்கடை மகளிர் சிறை பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பண மோசடி
பண மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக மூவரும் நேற்று லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அதற்கமைய, 3 சந்தேக நபர்களும் நேற்று பிற்பகல் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பிணை நிபந்தனை
சந்தேக நபர்கள் 50000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். எனினும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால், 3 சந்தேக நபர்களும் நேற்று பிற்பகல் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

