பதவி கொடுக்காததால் யாழ்.வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின்
உள்ளுராட்சி சபை தேர்தல் வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் குற்றங்களை
வெளியில் கூறுவதாக சமூக செயற்பாட்டாளரும்,வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை
இயக்கத்தின் தலைவருமான இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி, கிழக்கை தலைமையமாகக் கொண்டு இயங்கும் சமூக மாற்றத்திற்கான ஊடக
மையத்தில் இன்று(2) ஊடக சந்திப்பை மேற்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒரு சில தினங்களுக்கு முன்பு யாழ் வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தி
உள்ளூராட்சி வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தி ஆசனங்களை பிரித்துக்
கொடுப்பதில் தமக்கு அநீதி இழைத்துள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
குற்றச்சாட்டு
அத்துடன் வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தி இணைப்பாளர் சட்ட விரோத
தொழில்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

இவ்வளவு காலமும் இதனை வெளியில் கூறாமல் திடீரென்று தற்பொழுது இதை வெளியில்
கூறுவதற்கான காரணம் என்ன?
உங்களுக்கு பதவி தரவில்லை என்பதால் தான் நீங்கள் இதை தற்பொழுது வெளியில்
கூறுகிறீர்கள் நீங்கள் நேர்மையானவராக இருந்திருந்தால் இதை அப்போதே நீங்கள்
வெளியில் கொண்டு வந்திருப்பீர்கள்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் வடமாட்சி கிழக்கில்
அதிகளவான சட்ட விரோத தொழில்களில் ஈடுபடுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி கிழக்கு வேட்பாளர்கள்
சில கடற்றொழிலாளர்களை அழைத்து சென்று தடை செய்யப்பட்ட லைலா வலைக்கு அனுமதி வாங்கி
கொடுத்ததாக குற்றச்சாட்டு இருக்கிறது.
ஆகவே நீங்களும் பதவிக்காக அலைந்து திரிபவர்கள் உங்களுக்கு பதவி தரவில்லை
என்று தான் நீங்கள் இந்த குற்றச்சாட்டை தற்போது முன் வைக்கிறீர்கள்.இதை
ஏற்கெனவே நீங்கள் கூறியிருக்க வேண்டுமென தெரிவித்தார்.

