எதிர்வரும் 2031ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைக்க கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு முதல்
புதிய பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்காக சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கவியல் தொடர்பான புதிய கற்றல் தொகுதிகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்வி மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்பு
இதன் ஆரம்பகட்டமாக தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் கற்றல் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறுவயதுக் கல்வியை முறையான கட்டமைப்புக்குள் கொண்டு வரும் வகையில் தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் முன்பள்ளிப் பதிவு, பாடத்திட்டத் தயாரிப்பு, ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Source: https://tamilwin.com/article/plan-reduce-number-g-c-e-ordinary-level-subjects-1789474838

