முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு (Keheliya Rambukwella) எதிரான வழக்கில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பல முன்னாள் அமைச்சரவை
அமைச்சர்கள் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும்
குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், சுமார்
350 பேர் சாட்சிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
அவர்களில் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள்
அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, விஜயதாச ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா
மற்றும் ரொசான் ரணசிங்க ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருந்துகள் ஒழுங்குமுறை
அத்தோடு, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவர் டாக்டர் ஆனந்த
விஜேவிக்ரம உட்பட மருத்துவர்கள் குழுவும் பெயரிடப்பட்டுள்ளது.

இதனுடன் தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்தமை தொடர்பில், கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 11 பேர்
மீது கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முறையற்ற இந்த கொள்வனவின் மூலம் 144.4 மில்லியன் ரூபாய் பொது நிதியை தவறாகப்
பயன்படுத்த சதி செய்ததாக பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

