தேசிய மக்கள் சக்தியினர் இனவாதிகள் அல்லர். எனவே,
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் அமோக ஆதரவு கிட்டும். அதன்மூலம்
மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான சட்டத்தரணி
சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
எமது தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எளிமையானவர். தனது நடத்தை மூலம்
அவர் அதனை உறுதிப்படுத்தி வருகின்றார். மக்கள் எமக்கு வழங்கியுள்ள பொறுப்பு
உரிய வகையில் நிறைவேற்றப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் வாக்குகள்
ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு, கிழக்கில் இருந்து எமக்கு விழாத வாக்குகள்
நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் என உறுதியாக நம்புகின்றோம்.
அந்த ஆதரவுடன்
மூன்றிலிரண்டுப் பெரும்பான்மைப் பலம் கிட்டும் என எதிர்பார்க்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தியினர் இனவாதிகள் அல்லர்.
அனைவருக்கும் சம உரிமை வழங்கி,
இலங்கையர்கள் என்ற நாமத்தை தேசிய மக்கள் சக்தியால்தான் காக்க முடியும் என்பது
மக்களுக்கு தெரியும்.
எனவே, ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ், முஸ்லிம்
மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற வாக்குகள் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம்
இரட்டிப்பாகும் என தெரிவித்துள்ளார்.