அமெரிக்காவின் (United States) சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனாலட் ட்ரம்ப், பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார்.
அதில், முக்கியத்துவம் வாய்ந்தது அரசுத் துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை என அறிவிக்கப்பட்டிருந்தது.
எட்டு மாத ஊதியம்
இதற்கு முன்பே, இலட்சக்கணக்கான ஊழியர்களுக்கு எட்டு மாத ஊதியத்துடன் கட்டாய பதவி விலகல் செய்துகொள்ள ட்ரம்ப் நிர்வாகம் வாய்ப்பு அளித்திருந்தது.
இந்தநிலையில், கடந்த மாதம் வெளியிட்டிருந்த உத்தரவில் பெப்ரவரி ஆறாம் திகதிக்குள் பணியில் இருந்து பதவி விலகல் செய்துகொண்டால் எட்டு மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிறுவன ஊழியர்கள்
இதனடிப்படையில், அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் (யூஎஸ்ஏஐடி) பணிபுரியும் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்தோடு, பல்வேறு நாடுகளில் பணிபுரியும் 4,500 இற்கும் மேற்பட்ட சர்வதேச மேம்பாட்டு நிறுவன ஊழியர்களை ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பில் அனுப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாகிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக சில ஊழியர்களை தவிர்த்து அனைவரும் குறித்த நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.