அரிசி மாபியாவின் தலைவராக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) செயற்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ( Udaya Gammanpila) குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (07) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரிசி மாபியாக்களுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் அரிசி விலையை குறைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரிசி மாபியாக்கள்
ஆனால் தற்போது அரிசி மாபியாக்கள் இலாபமடையும் சூழலையே அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க அரிசி மாபியாக்களின் தலைவராக செயற்படுகிறார்.
]அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை அரிசி உற்பத்தியாளர்கள் கவனத்திற் கொள்ளவில்லை.
உள்ளூர் சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு அல்லது விலையேற்றம் காணப்படும் சந்தர்ப்பத்தில் அதனை முகாமைத்துவம் செய்வதற்காக, அரிசி இறக்குமதி செய்யப்படும் போது இறக்குமதி வரி குறைக்கப்படும்.
அப்போது தான் உள்ளூர் சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு அல்லது விலையேற்றத்துக்கு தீர்வு காண முடியும்.
தனியார் துறையினர் அரிசி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இறக்குமதியின் போது ஒருகிலோ அரிசி வரி
இறக்குமதியின் போது ஒருகிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகிறது.
வரி உட்பட போக்குவரத்து செலவு உள்ளடங்களாக உள்ளூர் சந்தையின் அரிசியின் விலைக்கு இணையானதாகவே இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையும் காணப்படுகிறது.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு மற்றும் அரிசி விலையேற்றத்துக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்துக்கு இருக்குமாயின் 65 ரூபா இறக்குமதி வரியை குறைத்திருக்க வேண்டும்.
வரியை அதிகரித்து இறக்குமதி செய்யும் அரிசியின் விலையையும், உள்ளுர் சந்தை அரிசியின் விலையையும் அரசாங்கம் சமப்படுத்தியுள்ளது.
உண்மையில் அரசாங்கம் அரிசி மாபியாக்களுக்கு சாதகமாக சூழலையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் அரிசி மனித பாவனைக்கு உகந்ததல்ல என்று குறிப்பிடப்படுகிறது.
அரிசி மற்றும் நெல்லை பதுக்கி வைத்துள்ள பிரதான அரிசி உற்பத்தியாளர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் உதய கம்மன்பில தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.