மட்டக்களப்பு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர், இன்று (11) கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அம்பிட்டிய சுமணரத்ன தேரரை இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இருவர் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி மட்டக்களப்பு சென்ட்ரல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் சுமணரத்ன தேரர் உள்ளிட்ட ஐவர் நுழைந்து, அங்கிருந்த அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகளால் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த திங்கட்கிழமை (7) பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று தேரருடன் சம்பவ இடத்திற்குச் சென்றதாகக் கூறப்படும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், இனிமேல் எந்தவொரு அரச திணைக்களத்திற்கும் சென்று இதுபோன்று அச்சுறுத்தல் அல்லது இடையூறு ஏற்படுத்தக்கூடாது என தேரருக்கு கடும் நிபந்தனை விதித்தார்.
மேலும், வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தவோ அல்லது அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது என்றும், சம்பவத்துடன் தொடர்புபட்டு தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிபந்தனைகளை மீறினால் பிணை இரத்து செய்யப்பட்டு, வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட நேரிடும் எனவும் நீதவான் எச்சரித்தார்.
இதனடிப்படையில், இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இருவர் கொண்ட சரீரப் பிணையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் விடுவிக்கப்பட்டார்.
அதேவேளை, இன்று கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கை எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
Source: https://samugammedia.com/court-issues-order-to-ambittiya-theerar-with-strict-conditions-1789120541

