ஆசிரியர் சேவையில் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, 2022 ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் 2025 ஜூன் 30ஆம் திகதி வரை ஆசிரியர் சேவையின் தரம் I-க்கு தரமுயர்வு பெற்ற ஆசிரியர்கள், வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளைப் பூர்த்தி செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.
எனினும், அடுத்த தரமுயர்வைப் பெறுவதற்கு முன்னர், குறித்த வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒருவர் தரமுயர்வு பெற்ற தரத்திற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டிய வினைத்திறன் தடைத்தாண்டலை, அடுத்த தரமுயர்வுத் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஏற்கனவே தரமுயர்வு பெற்ற அதிகாரிகளுக்கும் சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஜூன் 30ஆம் திகதி முதல், தாம் சார்ந்த தரத்திற்கான வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளுக்கு இடையில் தரமுயர்வு பெறும் அதிகாரிகளுக்கும், Modules அல்லது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளைப் பூர்த்தி செய்துள்ளார்களா என்பதைப் பொருட்படுத்தாமல் தரமுயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
• முதலாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை – இலக்கம் 2494, 2026/06/19 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் நடைபெறும்.
• இரண்டாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை – இலக்கம் 2498, 2026/07/17 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் நடைபெறும்.
• மூன்றாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை – இலக்கம் 2503, 2026/08/21 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் நடைபெறும்.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் தெளிவுபடுத்தும் வகையில், எதிர்காலத்தில் கல்வி அமைச்சினால் கல்விச் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
மேலும், இலக்கம் 2444/21 மற்றும் 2025/07/08 திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு அமைவாக, வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

