களுத்துறை, ஹொரணை – மொரகஹஹேன வீதியின் கனன்வில விகாரைக்கு அருகிலுள்ள வளைவுப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (19) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிரே பயணித்த மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் பன்னிபிட்டிய மற்றும் கிரிவத்துடுவ பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 17 வயதுடைய தில்ஷான் மதுசர செனவிரத்ன மற்றும் உதீஷ சித்மின என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கனன்வில வளைவில் திரும்ப முற்பட்ட போது மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அது வலதுபுறமாகச் சென்று எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

