கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது சுகாதார விதிமுறைகளை மீறி உணவகம் நடத்திய உரிமையாளருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் ரூ.24,000 அபராதம் விதித்ததுடன், ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையையும் வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த பெப்ரவரி 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
உற்சவத்தின் போது செயல்பட்ட உணவு விற்பனை நிலையங்கள், நெடுந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ. ஜெனற் ஜோன்சன் தலைமையிலான குழுவினரால் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான உணவகம் சுகாதாரமற்ற முறையில் இயங்கியமை கண்டறியப்பட்டது. குறிப்பாக, தேநீர் தயாரிக்கும் பகுதி சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டதுடன், உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக பழங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்ததோடு, உணவைக் கையாளும் பணியாளர்கள் உரிய சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, உணவக உரிமையாளருக்கு எதிராக நெடுந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ. ஜெனற் ஜோன்சன் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
கடந்த 3 ஆம் திகதி வழக்கை விசாரித்த நீதவான், மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து மொத்தமாக ரூ.24,000 அபராதம் விதித்தார்.
மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், அந்தத் தண்டனைகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

