பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பிரதேசங்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், இதனால் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பிரதேசங்களில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 3.0 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் கடல் நிலைமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

