புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவில்களின் 152ஆவது ஆண்டு ஆடிவேல் வெள்ளி ரத பவனியை முன்னிட்டு, கொழும்பின் பல பகுதிகளில் இன்று (28) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளும் பொதுமக்களும், முடிந்தவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்று காலை 7.30 மணியளவில் புறக்கோட்டை கடற்கரை வீதியில் அமைந்துள்ள கதிரேசன் கோவிலில் இருந்து ஆடிவேல் வெள்ளி ரத பவனி ஆரம்பமாகியுள்ளது. இது இரவு 8.30 மணியளவில் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள புதிய கதிரேசன் கோவிலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரத பவனி கொழும்பு செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, பிரதான வீதி, மணிக்கூட்டு கோபுரம் சந்தி, லைடன் பாஸ்டியன் வீதி, யோர்க் வீதி, பரன் ஜயதிலக்க மாவத்தை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் காலி வீதி ஊடாக பம்பலப்பிட்டியை நோக்கிப் பயணிக்கும்.
குறிப்பாக, மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஊடாக காலி வீதியில் ரத பவனி பயணிக்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இரவு 7.00 மணியளவில் பழைய கதிரேசன் கோவிலையும், இரவு 8.30 மணியளவில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலையும் சென்றடையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரத பவனியின் திரும்பும் பயணம் எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இருந்து ஆரம்பமாகி, புறக்கோட்டை கடற்கரை வீதியில் அமைந்துள்ள கதிரேசன் கோவிலை நோக்கிப் பயணிக்கவுள்ளது.
இந்த ரத பவனி அன்றைய தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ரத பவனி இடம்பெறும் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளைப் பயன்படுத்தி, போக்குவரத்து பொலிஸாரின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

