அரசு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவில், தம்மையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர் மற்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 8 தரப்பினரால் இந்த இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மனுதாரர் தரப்பு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த பின்னர், இந்த இடைக்கால மனுக்கள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என நீதியரசர் இதன்போது தெரிவித்தார்.
இதனடிப்படையில், இடைக்கால மனுக்களை தாக்கல் செய்துள்ள தரப்பு சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன், குறித்த மனுக்களை பரிசீலனைக்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் மீண்டும் நீதிமன்றில் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

