அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் 150 தேசிய பாடசாலைகள் மற்றும் 7 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 227 கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக புதிய கணக்காய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட மொத்த நட்டம் 2,274,230,000 ரூபாய் என கல்வி அமைச்சின் பொறியியல் பிரிவினால் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த நட்டம் தொடர்பான தகவல்கள் நிதி அறிக்கைகளில் அடையாளப்படுத்தப்படவோ அல்லது உரிய முறையில் வெளிப்படுத்தப்படவோ இல்லை என கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான பிரதான பொறுப்பு கல்வி அமைச்சின் பொறியியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டில் 41 நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்காக 8,432,290,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2025ஆம் ஆண்டுக்குள் குறித்த செயற்றிட்டங்களின் முன்னேற்றத்தை ஆராய்ந்தபோது, 10 செயற்றிட்டங்கள் முற்றாக முன்னெடுக்கப்படாமல் இருந்ததாகவும், மேலும் 16 செயற்றிட்டங்களின் பௌதிக முன்னேற்றம் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்பட்டதாகவும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், கல்வித்துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பெருமளவிலான நிதிக்கு எதிராக எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கணக்காய்வு மூலம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

