பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய மறைத்து வைக்கப்பட்ட 86 மதன மோதகங்கள் கந்தளாயில் மீட்பு
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதன மோதகங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறு கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எம்.ஏ. நபீல் தெரிவித்தார்.
சுதேச மருத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போதே குறித்த மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கந்தளாய் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதன மோதகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, கந்தளாய் பிரதான வீதியில் அமைந்துள்ள மருந்தகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, பொதி செய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86 மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, திருகோணமலை அலஸ்தோட்டம், நாளாம் கட்டை மற்றும் பதவிஸ்ரீபுர உள்ளிட்ட பகுதிகளில் மதன மோதகம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் கடை உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாணப் பணிப்பாளர் எம்.ஏ. நபீல் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதகங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

