பொசோன் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தேசிய சாரணர் பொசோன் வலயம்” திட்டத்தின் காரணமாக, கொழும்பு நகருக்குள் விசேட போக்குவரத்து திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜூன் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் மாலை 06.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை இந்த போக்குவரத்து திட்டம் அமலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
லேக்ஹவுஸ் சுற்றுவட்டாரத்தில் இருந்து (ரீகல் சந்தி) பொலிஸ் தலைமையக சுற்றுவட்டாரம் வரையிலான சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் (சுமார் 500 மீற்றர் தூரம்) இந்த பொசோன் வலயம் நடத்தப்படவுள்ளது.
அதற்கமைய, அந்த காலப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்வதற்காக கொழும்பு போக்குவரத்து பிரிவினால் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் வீதி கட்டுப்பாடுகள் மற்றும் மாற்று வழிகள் பின்வருமாறு:
போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் இடங்கள்:
ரீகல் சந்தியிலிருந்து சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தைக்குள் நுழைதல்.
ஜஸ்டிஸ் அக்பார் மாவத்தை – மெலே வீதி சந்தியிலிருந்து மெலே வீதிக்குள் நுழைதல்.
சாரணர் மாவத்தையிலிருந்து கொம்பனித்தெரு மேம்பாலம் நோக்கி நுழைதல்.
பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகள்:
ரீகல் சந்தி பக்கமிருந்து வரும் வாகனங்கள் டி. ஆர். விஜேவர்தன மாவத்தை ஊடாக காமினி சுற்றுவட்டாரம் நோக்கியும், செரமிக் சந்தி – லோட்டஸ் வீதி ஊடாக என்.எஸ்.ஏ. சுற்றுவட்டாரம் நோக்கியும் செல்லலாம்.
ஜஸ்டிஸ் அக்பார் மாவத்தை பக்கமிருந்து வரும் வாகனங்கள் மெலே வீதி மேம்பாலம் மற்றும் அலியா நானா சுற்றுவட்டாரம் ஊடாக சாரணர் மாவத்தை நோக்கி செல்லலாம்.
சாரணர் மாவத்தை கொம்பனித்தெரு மேம்பாலத்திற்கு அருகில் இருந்து வரும் வாகனங்கள் என்.எஸ்.ஏ. சுற்றுவட்டாரம் மற்றும் அலியா நானா சுற்றுவட்டாரம் நோக்கி செல்லலாம்.
வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடிய இடங்கள்:
பொசோன் வலயத்தை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பின்வரும் இடங்கள் வாகன நிறுத்தங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன:
டி. ஆர். விஜேவர்தன மாவத்தை வாகன நிறுத்தகம்
குமரன் இரத்தினம் வீதி மற்றும் கியூ வீதி
வொக்ஷோல் வீதி
பழைய பாதுகாப்பு அமைச்சு வளாகம்
ஷங்ரி-லா ஹோட்டலுக்கு அருகிலுள்ள வளாகம்
யூனியன் பிளேஸ் எக்சஸ் டவர்
லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் உள்ள வாகன நிறுத்தகம்
பழைய மெனிங் சந்தை வாகன நிறுத்தகம்
சாமர்ஸ் வாகன நிறுத்தகம்
இந்த நாட்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, மேற்படி மாற்று வழிகள் மற்றும் வாகன நிறுத்தங்களைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Source: https://samugammedia.com/national-scout-poson-zone-police-announcement-to-motorists-1782566687

