பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று 10ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலாலிச் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “அனுர அரசே, மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் மீளக் கையளி”, “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “இராணுவப் பிடியிலிருந்து எங்கள் காணிகளை விடுவி” உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை அவர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை, கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், பலாலி செபஸ்ரியார் ஆலயம் அமைந்திருந்த இடத்திலிருந்து கறுப்பு உடை அணிந்து, கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக பலாலிச் சந்தி வரை சென்று,
பலாலிச் சந்தியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச் சாவடிக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி பல்வேறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், காணி விடுவிப்பைக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், ஜனநாயகக் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக பலாலி பொலிஸாரும் உதவி பொலிஸ் அத்தியட்சகரும் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் பொலிஸார் வாக்குமூலமும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தமது பூர்வீக நிலங்களை மீட்டு, இயல்பு வாழ்க்கையை மீளப் பெற்றுக்கொள்ளும் வரையில் தமது போராட்டம் தொடரும் என பலாலி நிலமிழந்த மக்கள் தெரிவித்துள்ளனர்





Source: https://samugammedia.com/dont-be-afraid-of-court-cases-the-protest-continues-in-palani-1787481023

