யாழ்ப்பாணம் – குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
32 வயதுடைய செல்வராசா கசிவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிடைத்த தகவல்களின்படி, நேற்று மடு மாதா ஆலய யாத்திரைக்காக பக்தர்கள் புறப்பட்டுச் சென்ற வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வெடிக்காமல் இருந்த பட்டாசை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக செல்வராசா கசிவன் அதற்கு அருகில் சென்று ஊதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அப்போது பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் திடீர் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




