வழக்குத் தீர்ப்பின் பிரதியை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் நிலுவையிலிருந்த பணத்தகராறு தொடர்பான வழக்கொன்றில் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், அந்த வழக்கின் தீர்ப்புப் பிரதியை வழங்குவதற்காக சந்தேகநபர் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி 500 ரூபாய் இலஞ்சப் பணத்தை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர் நேற்று (16) கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

