சில பாடசாலைகள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் டெங்கு நோய் பரவும் அதிக அபாயத்தைக் கொண்ட இடங்களாக சுகாதாரப் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எனவே, இது குறித்து அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும் எனவும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களால் இயன்றவரை பங்களிப்பு வழங்கி, அந்த இடங்களை அதிக அபாயகரமான நிலையிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மஹரகம நகரசபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் கொட்டாவை நகர மத்தியில் நேற்று நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இம்முறை அதிக அபாயமுள்ள இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளவை பாடசாலைகள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களாகும் என சுகாதார அதிகாரிகள் எமக்குத் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தி, இந்த வாரத்திற்குள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக விசேட தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானித்தோம். கொழும்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள ‘அதிக அபாய வலயம்’ என்ற முத்திரையை அகற்றுவதே எமது இலக்காகும்.
அதன் மூலம் கொழும்பு மாவட்டத்தையும், மஹரகம நகரையும் குறைந்த அபாயமுள்ள இடங்களாக மாற்றுவோம். அனைவரும் ஒன்றிணைந்தால் எம்மால் இதனைச் செய்ய முடியும் என நான் நினைக்கிறேன். இது ஒரு வாரத்திற்கான வேலை மாத்திரமல்ல. இந்த காலம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய ஒன்று. இந்த வாரத்தை ஒரு விசேட தேடுதல் நடவடிக்கையாக மாற்றியுள்ளோம் என்றார்.
இந்நிலையில் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ள கல்வி அமைச்சு, பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கொசுக்கள் போக்கும் இடங்களை இனங்கண்டு அழிப்பதற்கும், சமூக பங்களிப்புடன் கூடிய துப்புரவாக்கல் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.

