இலங்கையில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 65,034 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 694 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், எந்தவித உயிரிழப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் மேல் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று வருகின்றனர். அதேபோன்று, பலர் தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியுள்ளனர்.
“அவர்கள் விடுமுறைக்காக யாழ்ப்பாணத்திற்கு வரும்போது, பலர் டெங்கு நோய்த்தாக்கத்துடன் வந்து இங்குள்ள வைத்தியாசலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், மாவட்ட மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட மாவட்ட மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜ், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பரவும் வீதம் குறைந்த நிலையில் காணப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது அவசியம் என தெரிவித்தார்.
அதன்படி, எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மாவட்டம் முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

