வவுனியா மாநகரசபையில் ஊழல் மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் இடம்பெற்றமையினாலேயே மேயர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா என மாநகரசபை சுயேச்சை குழு உறுப்பினர் சி.பிறேமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா மாநகரசபையின் மேயர் சு.காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்படமை தொடர்பில் அவர் இன்று (27.06) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மக்கள் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வாக்களித்து தமக்கான பிரதி நிதிகளை தெரிவு செய்திருந்தனர். ஆனால் வவுனியா மாநகர சபையைப் பொறுத்த வரை அங்கு மக்கள் நலன் சார் வேலைத்திட்டங்கள் சபை அனுமதியுடன் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை. மேயர் தலைமையில் தனிச்சையான பல செயற்பாடுகளும் அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றன.
மக்களை பாதிக்கும் வகையிலும், சபை நிதியை வீண் விரயம் செய்து மோசடி செய்யும் வகையிலும் முறைகேடுகள், ஊழல் செயற்பாடுகள், நிதி மோசடிகள் இடம்பெற்றிருந்தன. அதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன. குறித்த முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களுக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து உள்ளூராட்சி ஆணையாளர், பொறியியலாளர், தொழில் நுட்ப உத்தியோகத்ர்கள் என குழு ஒன்று அமைத்து விசாரணை இடம்பெற்று அந்த அறிக்கையின் பிரகாரம் வடக்கு மாகாண ஆளுனர் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஒன்றினை மேற்கொள்ள பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளில் ஊழல் முறைகேடு இடம்பெற்றமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்தே வடக்கு மாகாண ஆளுனர் விசேட வர்த்தமானி ஊடாக வவுனியா மாநகரசபை மேயரின் பதவியை பறித்துள்ளார்.
இது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. அதை நாம் வரவேற்கின்றோம். மக்கள் பணத்தை மோசடி செய்ய எவருக்கும் இடமளிக்க கூடாது. இன்று பல சமூக ஊடகப் போராளிகளும், சில கட்சி அரசியல் வாதிகளும் வவுனியா மாநகரசபை மேயரின் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துகளை கூறி வருவதுடன், ஆளுனர் மீதும் விமர்சனங்களை செய்து வருகின்றனர். இது தவறான விடயம். அவர்களிடம் நான் ஒரு கேள்வியை முன்வைக்கின்றேன். வவுனியா மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பான முழுமையான ஆதாரங்கள் உள்ளன. அதனை இல்லை என மறுக்கும் சமூகப் போராளிகள், கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பகிரங்க விவாதத்திற்கு வர தயாரா என கேள்வி கேட்கின்றேன்.
மாநகர முன்னாள் மேயர் கூட தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என பகிரங்க விவாதத்திற்கு வந்து நிரூபிக்க முடியுமா என கேட்கின்றேன். எனவே, மக்களுக்கான ஒரு ஆட்சியினை வவுனியா மாநகரசபையில் உருவாக்க வேண்டும். அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல்வாதிகள் பின்னால் சென்று நகரத்தை நாசமடைய இடமளிக்கக் கூடாது- எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

