லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்குவதே தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது, அத்துடன் ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஹப்புத்தளையில் இன்று (08) நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இராணுவ நிகழ்ச்சி
அங்கு தொடர்ந்து தெரிவித்த ரணில், ”இந்த பிரதேசங்கள் பற்றி நான் 75 வருடங்கள் அறிவேன். இன்று குறைபாடுகள் இல்லாத அப்புத்தளை தேர்தல் தொகுதிக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகின்றேன்.
2022 ஆம் ஆண்டில் இராணுவ நிகழ்ச்சி ஒன்றுக்காக இங்கு பிரதமராக வந்தபோது அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் நீண்டு கிடந்தன. தொழில் இன்றி மக்கள் அல்லல்பட்டனர். வீடுகளில் முடங்கினோம். எதிர்காலம் கேள்விக்குறியாக தெரிந்தது. இவற்றை நிவர்த்திக்க மக்களுக்காக அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டேன்.
நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்கான இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். இப்போது வௌிநாட்டு வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய முடியும். ஐஎம்எப் இடமிருந்து நிவாரணங்கள் கிடைக்கின்றன. கடன் வழங்கிய நாடுகள் மீள் செலுத்த சலுகைக் காலத்தை வழங்கியுள்ளன. இந்த ஒப்பந்தங்களைப் பின்பற்றி முன்னோக்கி சென்றால் எமக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்.
எனவே, எனது எதிர்காலத்தை விடுத்து உங்கள் எதிர்காலத்தை தீர்மானியுங்கள். அநுரவும் (Anura Kumara Dissanayaka) சஜித்தும் (Sajith Premadasa) இவற்றை மாற்றுவதாக கூறுகிறார்கள். அதனால் நெருக்கடிகள் மீண்டும் தலையெடுக்கும்.“ என்றார்.